காதல் பிரச்சினை... வாலிபர் கடலில் குதித்து தற்கொலை முயற்சி

பெசன்ட் நகர் கடற்கரையில் காதல் பிரச்சினையில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரை போலீஸ்காரர்கள் காப்பாற்றினார்கள்.

Update: 2021-12-22 06:59 GMT
சென்னை,

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் போலீசாரின் மீட்பு குழுவினர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடற்கரையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைகண்ட மீட்பு குழு போலீஸ்காரர்கள் சபீன், ராஜா ஆகிய 2 பேரும் உடனே கடலுக்குள் நீந்திச் சென்று தற்கொலைக்கு முயன்ற வாலிபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் அவர், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை சேர்ந்த ரேலங்கி பணீந்திரகுமார் (வயது 30) என்பது தெரியவந்தது. அவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்து அவர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு போலீசார் முதல் உதவி சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காப்பாற்றிய போலீஸ்காரர்களை சென்னை போலீஸ் கமிஷனர் வெகுவாக பாராட்டினார்.

மேலும் செய்திகள்