பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை இறந்ததால் உறவினர்கள் முற்றுகை போராட்டம்
ஈரோடு, டிச.22- ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை திடீரென இறந்ததால், உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கதவின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை திடீரென இறந்ததால், உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கதவின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண் குழந்தை
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள ஆட்டையம்பாளையத்தை சோ்ந்தவர் சம்பத் (வயது 26). கார் மெக்கானிக். இவருடைய மனைவி மங்கையர்கரசி (23). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 4 வயதில் ஒரு மகள் உள்ளாள். இந்தநிலையில் மங்கையர்கரசி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 19-ந் தேதி அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு காலை 8.15 மணிஅளவில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மங்கையர்கரசிக்கும், அவரது குழந்தைக்கும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தாய், சேய் நல சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சாவு
இந்தநிலையில் நேற்று காலையில் மங்கையர்கரசிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக அவர் அறுவை சிகிச்சை அரங்குக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் தாய், சேய் நல சிகிச்சை பிரிவில் குழந்தை இருந்தது. சிறிது நேரம் சென்ற பிறகு, ஆஸ்பத்திரி பணியாளர்கள் குழந்தையை பார்த்தபோது அசைவின்றி காணப்பட்டது.
உடனடியாக குழந்தையை பரிசோதித்து பார்த்தபோது குழந்தை ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டதும், குழந்தையின் தாய் மங்கையர்கரசிக்கு நடக்க இருந்த குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படாமல் மீண்டும் வார்டு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு குழந்தையின் உடலை பார்த்து அவர் கதறி துடித்தார்.
முற்றுகை போராட்டம்
இந்த தகவல் பரவியதும் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த உறவினர்கள் தாய், சேய் நல பிரிவுக்கு முன்பு திரண்டனர்.
அவர்கள் குழந்தையின் இறப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ஆஸ்பத்திரியின் உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் கவிதா மற்றும் அரசு ஆஸ்பத்திரி போலீசார் அங்கு விரைந்து சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பரபரப்பு
அப்போது, ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது சிலர் கதவின் கண்ணாடியை உடைத்து வார்டு கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குழந்தை இறந்ததால், மங்கையர்கரசியை தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்க உள்ளதாக கூறி அவரை அனுப்பி வைக்கும்படி உறவினர்கள் கூறினார்கள். அதன்பிறகு மங்கையர்கரசியை அவர்கள் அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர். நுழைவு வாயில் பகுதியில் வந்ததும், அவர் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால் அவர் மீண்டும் ஆஸ்பத்திரிக்குள் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் கூறுகையில், “மங்கையர்கரசிக்கு கடந்த 19-ந் தேதி அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. அதன்பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று (அதாவது நேற்று) காலை 7 மணிஅளவில் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு மங்கையர்கரசியை அறுவை சிகிச்சை அரங்குக்கு அழைத்து சென்று உள்ளார்கள். தாயுடன் குழந்தை இல்லாதபோது பணியாளர்கள் முறையாக குழந்தையை பராமரித்து இருக்க வேண்டும். உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்துவிட்டது. சாவுக்கான காரணத்தை டாக்டர்கள் தெரிவிக்கவில்லை”, என்றனர்.
அதன்பிறகு குழந்தையின் தந்தை சம்பத் மற்றும் உறவினர்களை போலீசார் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.