2030-ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை ஒழிக்க இலக்கு - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேச்சு

2030-ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

Update: 2021-12-21 20:57 GMT
பெங்களூரு:

தவறான கண்ணோட்டம்

  பெலகாவியில் நேற்று உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு பேசியதாவது:-

  கொரோனா பரவிய தொடக்கத்தில் அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களை இந்த சமுதாயம் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தது. இது ஒரு சமூக பிரச்சினையாக ஏற்பட்டது. அரசின் நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றால் அவை அகற்றப்பட்டது. ஆனால் எச்.ஐ.வி. வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 35 ஆண்டுகள் ஆகியும் அந்த நோயாளிகள் மீதான தவறான கண்ணோட்டம் இன்னும் உள்ளது.

எய்ட்ஸ் நோயாளிகள்

  எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தார்மிக பலத்தை வழங்கும் பணி நடைபெற வேண்டும். அந்த நோயாளிகளுக்கு அரசு சார்பில் ஏ.ஆர்.டி. மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதனால் அவர்கள் நீண்ட காலம் வாழ முடிகிறது. அவர்களுக்கு தார்மிக ரீதியாக நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த சமுதாயம் மாற வேண்டும். தொடக்கத்தில் இந்த எச்.ஐ.வி. வைரஸ் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

  உலகில் இதுவரை இந்த நோயால் 3½ கோடி பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் 1.75 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேர் ஏ.ஆர்.டி. மருந்துகளை எடுத்து கொள்கிறார்கள்.

கூட்டு போராட்டங்கள்

  பாலியல் தொழிலாளிகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வருகிற 2030-ம் ஆண்டுக்குள் இந்த எய்ட்ஸ் நோயை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டு போராட்டங்கள் மூலம் மட்டுமே இந்த இலக்கை நம்மால் எட்ட முடியும்.

  ஆயுஸ்மான் பாரத்-ஆரோக்கிய கர்நாடக மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 1½ கோடி பேருக்கு அந்த காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் இன்னும் 3½ கோடி பேருக்கு அந்த காப்பீட்டு அட்டையை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 8 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  இவ்வாறு சுதாகர் பேசினார்.

மேலும் செய்திகள்