உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் உரக்கடைகளில் வேளாண் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் 17 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.;

Update: 2021-12-21 20:43 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உரக்கடைகளில் வேளாண் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் 17 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் ஆய்வு
சென்னை வேளாண் இயக்குனர் அறிவுரையின்படியும் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ் உத்தரவின் பேரிலும் தென்காசி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா தலைமையில் அதிகாரிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்திலுள்ள 154 தனியார் கடைகளில் கடந்த 2 நாட்களாக வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை துறை மற்றும் தாசில்தார் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழு திடீர் சோதனை நடத்தினோம். இதில் கடந்த 8-12-2021 முதல் பொட்டாஷ் உரத்தின் விலை ஒரு மூட்டைக்கு ரூ.1,040-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பழைய இருப்பில் உள்ள பொட்டாஷ் உரத்தை பழைய விலைக்கு விற்பனை செய்கிறார்களா? அல்லது கள்ளச்சந்தையில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்களா? என்பதை ஆய்வு செய்தோம்.

விற்பனைக்கு தடை
இந்த சோதனையில் 17 கடைகளில் விதிகள் மீறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உர கட்டுப்பாட்டு சட்டத்தின்படி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் உள்ள தனியார் உரக்கடையில் கணக்கில் கொண்டு வரப்படாத உரங்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கம் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் பொட்டாஷ் மற்றும் பிற ரசாயன உரங்களை பெறும்போது மூட்டையில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலை மட்டும் வழங்கி பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரக் கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகியவற்றின் படி நடவடிக்கை மேற்கொண்டு உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கடையநல்லூர்
கடையநல்லூரில் தாசில்தார் ஆதிநாராயணன், தோட்டக்கலை இணை இயக்குனர் ஆழ்வார்சாமி, வேளாண் விற்பனை அலுவலர் அப்துல் காதர், கடையநல்லூர் வட்டார அலுவலர் சிவமுருகன் கொண்ட குழுவினர் அனைத்து உரக்கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்