வார்டு மறுவரையறை ஆணையத்தின் மண்டல கருத்து கேட்பு கூட்டம்

வார்டு மறுவரையறை ஆணையத்தின் மண்டல கருத்து கேட்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள்-பொதுமக்கள் பங்கேற்றனர்.

Update: 2021-12-21 20:22 GMT
திருச்சி, டிச.22-
வார்டு மறுவரையறை ஆணையத்தின் மண்டல கருத்து கேட்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள்-பொதுமக்கள் பங்கேற்றனர்.
கருத்து கேட்பு கூட்டம்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் வார்டு மறுவரையறைகள் தொடர்பாக தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் திருச்சி, தஞ்சை, கரூர் மாவட்டங்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு மறுவரையறை ஆணைய தலைவர் பழனிகுமார் தலைமை தாங்கி பேசுகையில், வார்டு மறுவரையறை செய்வதில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் தெளிவான எல்லைகள் வரையறுக்க வேண்டும். புவியியல் ரீதியாக கச்சிதமாகவும், தொடர்ச்சியாகவும் இருக்க வேண்டும். ஒரு தனிநபருக்காகவோ, சமூகத்திற்காகவோ, அரசியல் கட்சிகளுக்காகவே சாதகமாக வார்டு மறுவரையறை செய்யக்கூடாது.
வார்டு மறுவரையறை செய்யும்போது, வடமேற்கில் தொடங்கி தென்கிழக்கில் முடிக்க வேண்டும் என பல விதிமுறைகள் உள்ளன. இந்த பணிகள் முடிவு பெற்றால் தான் அடுத்தகட்டமாக தேர்தல் பணிகளை தொடங்க முடியும். அதற்காக தான் மண்டல அளவில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
காலஅவகாசம் தேவை
இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அப்போது வார்டு மறுவரையறை செய்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டும். மேலும், உரிய காலஅவகாசம் வழங்காமல் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
3 மாவட்டங்களை ஒருங்கிணைத்து திடீரென கூட்டம் நடத்தப்படுவதால் கிட்டதட்ட 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து இந்தகூட்டத்தில் பங்கேற்க வேண்டி உள்ளது. முதலில் மாவட்டம் வாரியாக கூட்டம் நடத்திவிட்டு அதன்பிறகு மண்டல அளவில் கூட்டம் நடத்த வேண்டும் என்றனர். மேலும் சிலர், வார்டு மறுவரையறை செய்துள்ளது வரவேற்புக்குரியது என்று தெரிவித்தனர்.
கூட்டத்தில் மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர்கள் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, ஆணையத்தின் செயலர்-உறுப்பினர்  சுந்தரவள்ளி, கலெக்டர்கள் சிவராசு (திருச்சி),  தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் (தஞ்சை), பிரபுசங்கர்(கரூர்), முதன்மை தேர்தல் அலுவலர்கள் சுப்பிரமணியன் (ஊராட்சிகள்), தனலட்சுமி (நகராட்சிகள்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்