மின்னொளியில் ஜொலிக்கும் கிறிஸ்தவ ஆலயங்கள்
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ ஆலயங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.
நெல்லை:
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ ஆலயங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.
கிறிஸ்துமஸ் விழா
ஏசு கிறிஸ்து அவதரித்த நாளான டிசம்பர் மாதம் 25-ந்தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் முன்னேற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
ஆலய கோபுரங்கள், ஆலய வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரித்து உள்ளனர். பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள தென்னிந்திய திருச்சபை கதீட்ரல் பேராலாயத்தின் ஊசி கோபுரம் இரவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும் அந்த பகுதி மரங்கள், சாலையின் இரு புறமும் கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் வகையில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டு மின்னுகின்றன.
ஆங்காங்கே கிறிஸ்து பிறப்பை விளக்கும் குடில்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பெரும்பாலான கிறிஸ்தவ மக்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளனர். விழாவையொட்டி அலங்கார பொருட்கள் விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.
சிறப்பு ஆராதனை
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயம் உள்ளிட்ட கத்தோலிக்க ஆலயங்களில் 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு கிறிஸ்து பிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் போது வாணவெடிகள் வெடிக்கப் படுகிறது. தொடர்ந்து கிறிஸ்தவ மக்கள் தங்களது வீடுகளில் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள்.
சி.எஸ்.ஐ. ஆலயங்களில் 25-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலையில் கிறிஸ்து பிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.