சாலையில் மயங்கி விழுந்து இறந்த முதியவரிடம் ரூ.1.63 லட்சம்
மண்டைக்காடு அருகே சாலையில் மயங்கி விழுந்து இறந்த முதியவரிடம் இருந்து சிறு, சிறு பொட்டலங்களாக கட்டி வைத்திருந்த ரூ.1.63 லட்சம் கைப்பற்றப்பட்டது.
மணவாளக்குறிச்சி,
மண்டைக்காடு அருகே சாலையில் மயங்கி விழுந்து இறந்த முதியவரிடம் இருந்து சிறு, சிறு பொட்டலங்களாக கட்டி வைத்திருந்த ரூ.1.63 லட்சம் கைப்பற்றப்பட்டது.
ஊர் ஊராக சுற்றியவர்
திங்கள்நகர் அருகே உள்ள வாடிவிளையை சேர்ந்தவர் மரிய ஞானம் (வயது86). இவர் பாதசாரியாக ஊர் ஊராக சென்று ஊக்கு, கத்தி போன்றவை விற்பனை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் இவர் மண்டைக்காடு அருகே கூட்டுமங்கலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி சாலையில் விழுந்ததாக தெரிகிறது. உடனே அந்த பகுதியினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி அளித்தனர். அப்போது அவரிடம் இருந்த சிறு சிறு பொட்டலங்களில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. டாக்டர்கள் அந்த பணத்தை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் ரூ.53 ஆயிரம்
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் சிறு சிறு பொட்டலங்களாக மேலும் ரூ.53 ஆயிரம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே தகவல் அறிந்த மரிய ஞானத்தின் மகனும் உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர், முதியவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் ரூ.53 ஆயிரம் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் மரிய ஞானம் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில், சாலையில் விழுந்து படுகாயமடைந்தார் என கூறப்படுகிறது. அவர் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தாரா? அல்லது வயது மூப்பு காரணமாக மயங்கி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் மயங்கி விழுந்து இறந்த முதியவரிடம் ரூ.1.63 லட்சம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.