அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்
நெல்லை அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
நெல்லை:
நெல்லை அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் சாலை மறியல்
நெல்லை பாளையங்கோட்டை அருகே ரெட்டியார்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் நேற்று காலையில் புத்தக பையுடன் பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் வசந்தா, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சிவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
குடிநீர் பிரச்சினை
அப்போது மாணவர்கள் கூறுகையில், ‘இந்த பள்ளிக்கூடத்தில் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும். கூடுதல் கழிப்பறை வசதி அமைத்து தர வேண்டும். சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர்.
இதில் குடிநீர் பிரச்சினை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘இந்த பள்ளிக்கு ஆர்.ஓ. சிஸ்டம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கான மின்மோட்டார் பழுதடைந்து உள்ளது. இதனை உடனடியாக சரிசெய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது' என்றனர்.