வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகைகள் கொள்ளை
திருப்பதிசாரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி,
திருப்பதிசாரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இத்தாலியில் வசிக்கிறார்
நாகர்கோவில் அருகே உள்ள ஓட்டாபீஸிலிருந்து திருப்பதிசாரம் செல்லும் சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. அதன் அருகே மாடி வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்த வீட்டின் உரிமையாளர் கந்தசாமி (வயது53) ஆவார். இவர் குடும்பத்துடன் இத்தாலியில் வசித்து வருகிறார். அங்கு வெல்டராக வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது அவர் குடும்பத்துடன் ஊருக்கு வந்து விட்டு பின்னர் மீண்டும் வெளிநாட்டுக்கு சென்று விடுவார். அந்த வீட்டை பாதுகாப்பதற்காக அவருடைய வீட்டு கார் செட்டை அவருடைய நண்பர் திவாகர் என்பவருக்கு வாடகைக்கு விட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பூட்டு உடைப்பு
இந்தநிைலயில் அந்தப்பகுதியை திலகர் காய்கறி வைக்கும் குடோன் ஆக பயன்படுத்தி வந்தார். நேற்று முன்தினம் திலகர் அந்த வீட்டுக்கு சென்றபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உடனே பதறிப்போய் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் ஆங்காங்கே சிதறிக்கிடந்தது. மேலும், பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடனே, இது குறித்து அவர் வெளிநாட்டில் இருக்கும் கந்தசாமிக்கு தகவல் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
70 பவுன் கொள்ளை?
அப்போது வெளிநாட்டில் இருக்கும் கந்தசாமி உடன் போலீசார் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் வீட்டில் 70 பவுன் நகை இருந்ததாக கூறியுள்ளார். பீரோ உடைக்கப்பட்டதால் வீட்டுக்கு வந்த கொள்ளையர்கள் 70 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் கந்தசாமி வெளிநாட்டில் இருந்து வந்த பிறகுதான் முழுமையான விவரம் தெரியவரும். இந்த கொள்ளை சம்பவத்தை அறிந்த கந்தசாமியும் இத்தாலியில் இருந்து புறப்பட்டு வருகிறார்.
போலீசார் மோப்ப நாயை கொண்டு வந்தனர். நாகர்கோவிலில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையனின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அடிக்கடி ஆட்கள் நடமாட்டமும், போக்குவரத்தும் இருக்கும் இடத்தில் இப்படி ஒரு கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.