சித்த மருத்துவ கல்லூரி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவ கல்லூரி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவ கல்லூரி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சித்த மருத்துவ கல்லூரி
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள புறநோயாளிகள் பிரிவு மற்றும் சில உள்நோயாளிகள் பிரிவு பழைய கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.
இந்த கட்டிடத்தில் மாடிப்பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி உள்பகுதிக்கு வருவதாகவும், சில கட்டிடங்கள் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது
இந்த நிலையில் நேற்று புறநோயாளிகள் பிரிவு காலை 9 மணிக்கு பரபரப்பாக செயல்பட்டு கொண்டு இருந்தது. இங்குள்ள 9, 10, 11, 12, 13 ஆகிய புறநோயாளிகள் அறைக்கு செல்லும் உள் வரண்டாவில் மேற்கூரை காங்கிரீட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனால் அங்குள்ள அறையில் இருந்த டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து வேகமாக வெளியேறினர். மேற்கூரை பூச்சு விழும்போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த 5 புறநோயாளிகள் அறைகள் அருகே உள்ள உள்நோயாளிகள் பிரிவு செயல்படும் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
கல்லூரி முதல்வர் விளக்கம்
இதுகுறித்து கல்லூரி முதல்வர் திருத்தணி கூறுகையில், 'இங்குள்ள புறநோயாளிகள் பிரிவு செயல்படும் பகுதியில் வரண்டாவில் மேற்கூரை பூச்சு சிறிய அளவில் பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தை பழுது பார்க்க வேண்டுமென அதிகாரிகளுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம். இதனை உடனடியாக சீரமைத்து தருமாறு கேட்டுள்ளோம்' என்றார்.
சமீபத்தில் நெல்லை சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார்கள். தற்போது, பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.