தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அம்பையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அம்பை:
அம்பை நகராட்சியில் பணிபுரியும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் நேற்று காலை பணிக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர் மோகன், துணை தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் சுடலையாண்டி, ஜெகதீஷ், இசக்கிராஜன், கணேசன், குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதயைடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், தி.மு.க. நகர செயலாளர் பிரபாகரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நகராட்சி ஆணையாளரிடம் எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.