பள்ளி கட்டிடத்தில் மரம் சாய்ந்து விழுந்தது
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் மரம் சாய்ந்து விழுந்தது
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் கண்ணார்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இது ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 18 மாணவிகள், 4 மாணவர்கள் என மொத்தம் 22 பேர் இங்கு படித்து வருகின்றனர். 1962-ம் வருடம் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் முன்பு மரம் ஒன்று உள்ளது. பழமையான இந்த மரம் நேற்று முறிந்து பள்ளியின் கூரை மீது விழுந்தது. அதிகாலையில் மரம் முறிந்து விழுந்ததால், காலையில் பள்ளியை சுத்தம் செய்வதற்காக வந்த பணியாளர்கள் இதனை கண்டு தலைமையாசிரியர் அசரபுநிஷாவிற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக நேரில் வந்த தலைமையாசிரியர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்பு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் அதிகாரிகள் வந்து சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்று பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நிலைய அலுவலர் தலைமையில், சாய்ந்து விழுந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது. பின்பு பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளில் 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு மட்டும் அருகில் உள்ள வீடு ஒன்றில் வகுப்பு நடத்தப்பட்டது. மற்றவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. அதிகாலையில் மரம் ஒடிந்து விழுந்துள்ளதால், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.