மேல்மிடாலத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து மேல்மிடாலத்தில் மீனவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

Update: 2021-12-21 18:05 GMT
கருங்கல்:
பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து மேல்மிடாலத்தில் மீனவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
தூண்டில் வளைவு
குமரி மாவட்டம் மேல்மிடாலம் மீனவ கிராமத்தில் உள்ள கடற்கரை பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடுகள் அமைத்து வசித்து வருகின்றனர். அவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர். இவர்களது வீடுகள் அனைத்தும் கடற்கரையை ஒட்டி உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்படும் கடல் அலைசீற்றங்களில் குடியிருப்புகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள், குருசடிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படும் அவலநிலை தொடர்ந்து  வருகிறது. 
இதனை தடுக்க மேல்மிடாலம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று  ஊர்மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனுக்கள் அளித்தனர். இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மேல்மிடாலம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.10 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நிதி ஒதுக்கி 4 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரை மேல்மிடாலம் பகுதியில் எந்த வித பணிகளும் தொடங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. 
உண்ணாவிரதம்
இதனால் அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்படும் கடல் அலை சீற்றத்தால் மேல்மிடாலம் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. 
எனவே தூண்டில் வளைவு அமைக்காமல் காலதாமதம் செய்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து ஊர்மக்கள் சார்பில் மேல்மிடாலம் பஸ் நிலையம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கினர்.
இந்த போராட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் பங்கேற்றார். இதில் பங்கேற்ற மீனவ பெண்கள் பாட்டு பாடி, கண்டன கோஷங்களை  எழுப்பினர்.
இதுபற்றி அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரி வசந்தி போராட்ட களத்திற்கு வந்து பங்கு தந்தை பிலிப்ஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையின் போது தூண்டில் வளைவு பணியை வருகிற பிப்ரவரி மாதம் 15-ந் தேதிக்குள் தொடங்குவதாக தெரிவித்தார் உடனே போராட்டக்காரர்கள் அதனை கடிதமாக எழுதி தந்தால் போராட்டத்தை கைவிடலாம் என்று கூறினர்.  அதைத்தொடர்ந்து அவர் கடிதமாக எழுதி கொடுத்தார். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.
 மேலும் வருகிற பிப்ரவரி மாதம் பணி தொடங்கப்படவில்லை எனில் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்