ஜல்லி சாலையாக மாறிய தார்சாலை
குடியாத்தம் கூடநகரம் சாலை அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. இதனால் தற்போது அந்த சாலை தார்முழுவதும் பெயர்ந்து ஜல்லி சாலையாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மீண்டும் தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேந்திரன், குடியாத்தம். |
சாலை அமைக்கப்படுமா?
ராணிப்பேட்டை மாவட்டம் மேலப்பழந்தை- வாழைப்பந்தல் சாலையில் இருந்து போலீஸ்நிலையம் வழியாக ஆயர்பாடிக்கு செல்ல இணைப்பு சாலை அமைக்க 20018-20019-ல் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. |
-ராஜேந்திரன், மேலப்பழந்தை. |
ஆபத்தான கிணறு
ஆரணியை அடுத்த மேல்நகர் கிராமத்தில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அருகில் சாலை ஓரத்தில் எந்தவித தடுப்புகளும் இன்றி ஆபத்தான நிலையில் கிணறு உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த கிணற்றில் விழுந்து 2 பேர் இறந்துள்ளனர். எனவே கிணற்றை சுற்றி வேலி அமைக்க வேண்டும். |
-அருண்குமார், மேல்நகர். |
பன்றிகள் தொல்லை
வேலூர் சத்துவாச்சாரியில் மாநகராட்சி 18-வது வார்டில் உள்ள நேதாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் பன்றிகள் நடமாடி வருகிறது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் தெருவில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் பன்றிகளால் நோய் பரவும்நிலையும் ஏற்படுகிறது. எனவே பன்றிகளை பிடிக்க மாநகராட்சி நடவடிக்க எடுக்க வேண்டும். |
-எஸ்.மதன்மோகன், சத்துவாச்சாரி. |
இறந்த மீன்களால் குளத்தில் துர்நாற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் காந்திசாலையில் கால்நடை மருத்துவமனைக்கு அருகில் உள்ள குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. இறந்த மீன்களை சிறுவர்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும். |
-சண்முகம், வேட்டவலம். |
மூடியே கிடக்கும் நூலகம்
வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் பெரியார் பூங்கா எதிரில் வேலூர் மாநகராட்சி காந்தி நினைவு நூலகம் இயங்கிவந்தது. தினமும் இங்கு பலர் வந்து புத்தகங்கள், தினசரி பேப்பர்கள் படித்து செல்வார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மூடப்பட்ட நூலகம் இதுவரை திறக்கப்படவில்லை. வாசகர்களின் நலன்கருதி நூலகத்தை திறக்கவேண்டும். |
-சுரேஷ்பாபு, வேலூர். |
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட நரியாப்பட்டு கிராமத்தில் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையின் நடுவில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தின் அடிப்பகுதி முழுவதும் சேதம் ஏற்பட்டு காற்றடித்தால் அசைந்து ஆடுகிறது. இதனால் கம்பம் விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன் சேதமான மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். |
குமரேசன், நரியாப்பட்டு. |