மாதனூரில் தரைப்பாலத்தை சீரமைக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு
தரைப்பாலத்தை சீரமைக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் உள்ள பாலாற்றின் தரைப்பாலம் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மாதனூரிலிருந்து குடியாத்தம் பகுதிக்கு செல்வதற்கு சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பணியாளர்கள், மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் சிலர் ஆபத்தை உணராமல் பாலாற்று வெள்ளத்தை கடந்து சென்று வருகின்றனர். இந்தநிலையில் தரைப் பாலத்தை சீரமைக்கக் கோரி மாதனூரில் நேற்று வியாபாரிகள் சங்கத்தினர் அப்பகுதியில் உள்ள சுமார் 230 கடைகளை அடைத்துவிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதனூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.