திண்டுக்கல் நாகல்நகர் பணிமனை முன்பு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
திண்டுக்கல் நாகல்நகர் பணிமனை முன்பு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நாகல்நகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மண்டல தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அய்யப்பா, பொருளாளர் ஆதிமூலம், துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை ஒரே சுற்றில் பேசி தீர்வு காண வேண்டும். 1.4.2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியின் போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை விரைவாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.