விதிகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 12 ஆட்டோக்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி ஆட்டோக்களில் அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதை தடுக்கும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இளங்கோ, செல்வம், ஸ்ரீதர், ஈஸ்வரன், சண்முகானந்தம், மோகனப்பிரியா ஆகியோர் நேற்று வாகன சோதனையில் இறங்கினர்.
அதன்படி திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது சாலை விதிகளை மீறி அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 12 ஆட்டோக்கள் சிக்கின. இதையடுத்து அந்த 12 ஆட்டோக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
மேலும் அதிக அளவில் ஆட்களை ஏற்றி செல்லுதல், வாகன உரிமம் புதுப்பிக்காதது உள்பட இதர விதிமீறல்களுக்காக ஆட்டோ, மினிவேன் உள்பட 10 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் தினமும் காலை, மாலை நேரங்களில் வாகன சோதனை நடத்தப்பட இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.