சாலை விபத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் சாவு
சாலை விபத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் உயிாிழந்தாா்.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வம் மகன் அருணாச்சலம் (வயது 22), கேபிள் டி.வி. ஆபரேட்டர்.
இவர் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் வந்து ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு மீண்டும் உளுந்தூர்பேட்டைக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நள்ளிரவு 1.30 மணியளவில் விழுப்புரம் வழுதரெட்டி அருகே சென்றபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அருணாச்சலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருணாச்சலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து நடந்தது குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த வழியாக சென்ற பஸ்சின் பின் சக்கரத்தில் அருணாச்சலம் சிக்குவது போன்ற காட்சி பதிவாகி உள்ளது.
அதனடிப்படையில் அந்த பஸ் தொடர்பான விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.