பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்
பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்
கோவை
கோவையில் பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
பழுதடைந்த கட்டிடங்கள்
நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பழுதடைந்த கழிவறை கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் இறந்தனர்.
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை கணக்கெடுக்க அந்தந்த கல்வி மாவட்ட அலுவலர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
அவர்கள், பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் பழுதடைந்த கட்டிடங்களை கண்டறிந்து இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா கூறியதாவது
வகுப்பறைகள் இடித்து அகற்றம்
கோவை மாவட்டத்தில் பழுதடைந்த கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் எனது தலைமையிலான குழுவினர் இடையர்பாளையம், கணுவாய், சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டோம்.
மதுக்கரை, கண்ணமநாயக்கனூர் உள்பட பகுதிகளில் நேற்று அந்தந்த கல்வி குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் கண்ணமநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளியில் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்த 2 வகுப்பறை கட்டிடங்கள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் உள்ள 2,065 பள்ளிகளையும் ஆய்வு செய்து பழுதடைந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்ட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.