பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏவை நோக்கி செருப்பு வீச்சு
பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏவை நோக்கி செருப்பு வீச்சு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்தை பார்வையிட சென்ற பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நோக்கி செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோதவாடி குளம்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே 152 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோதவாடிகுளம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தூர்வாரப்பட்டது. அதன்பின் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் சரிவரமழை பெய்யாததால் இந்த குளத்தில் தண்ணீர் தேங்காமல் வறண்டு காணப்பட்டது. இந்தநிலையில் குளத்தை கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தன்னார்வ அமைப்புகள் சீரமைத்து வந்தனர். தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையின் போது இந்த குளத்திற்கு தண்ணீர் வராமல் இருந்தது. இதனால் இந்த பகுதி விவசாயிகள், தன்னார்வலர்கள் பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் உபரி தண்ணீர் கோதவாடி குளத்திற்கு தர வேண்டும் என்று கூறியதால் கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன்காரணமாக நேற்று முன்தினம் இரவு கோதவாடி குளம் நிரம்பி தண்ணீர் மறுகால்விழுந்து சென்றது. இதனால் நேற்று காலை குளம் அருகே உள்ள அம்மன் கோவிலுக்கு பொதுமக்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து குளத்தின் கரை அருகே கோவில் முன்பு சாமியானா பந்தல் போடப்பட்டது.
பொள்ளாச்சி ஜெயராமன்
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், குளத்தை பார்வையிடவும் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து குளம் அருகில் அ.தி.மு.கவினர் திரண்டனர். இந்த தகவலை கேள்விப்பட்டதும் தி.மு.க.வினரும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குவந்த தி.மு.க.வினர் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தது நாங்கள். ஆகவே இந்த பொங்கல் விழாவில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ கலந்து கொள்ளக்கூடாது. கோவில் முன்பு அமைக்கப்பட்ட சாமியானா பந்தலை அகற்ற வேண்டும் என தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலை போலீசார், அ.தி.மு.க.வினரிடம் அனுமதிபெறாமல் அமைத்துள்ளீர்கள். ஆகவே சாமியானா பந்தலை உடனடியாக அகற்றுங்கள் என்றனர். இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அந்த சாமியான பந்தலை அகற்றினர். அங்கிருந்த சேர் மற்றும் சாமியான பந்தலை கைப்பற்றி கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
செருப்பு வீச்சு
இதனையடுத்து அங்கு வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர். தி.முக, அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தி.மு.க.வினர் கடும் கோஷம் எழுப்பினர். இதனால் இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பொங்கல் வைத்து இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தனது நிர்வாகிகளுடன் கோதவாடி குளத்திற்கு வந்து குளம் நிரம்பிய பகுதியில் மலர் தூவி விட்டு கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் தரிசனம் முடித்துவிட்டு பொள்ளாச்சி ஜெயராமன் அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது அ.தி.மு.க -தி.மு.க தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், போலீசார் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க கட்சியினர் உதவியுடன் பாதுகாப்புடன் மீட்டு அழைத்து வந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.வை நோக்கி ஒரு செருப்பு வீசப்பட்டது. இந்த செருப்பு அவர் மீது படாமல் அருகில் இருந்த மற்றொருவர் மீது பட்டு கீழே விழுந்தது. இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
வழக்கு தொடர்வேன்
இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறுகையில்:- அ.தி.மு.க ஆட்சியில் தூர்வாரப்பட்டு கோதவாடி குளத்திற்கு தற்போது அதிகளவில் மழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் பி.ஏ.பி உபரிநீர் வந்து குளம் நிரம்பி உள்ளது. இதற்கு மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் சாமிக்கு பொங்கல் வைத்து வணங்கும் பகுதியில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சாமியான பந்தலை போலீசாரே அகற்றியது வேதனையாக உள்ளது. போலீசார் தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்றார்.
இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் கூறியதாவது :-கோதவாடி குளத்திற்கு தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் தண்ணீர் திறந்து விடப்பட்டு குளம் நிரம்பி உள்ளது. இதனால் வருகிற 27-ந் தேதி விழா நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள் அ.தி.மு.கவினர் வேண்டுமென்றே அவர்கள் தண்ணீர் கொண்டு வந்ததாக ஒருதோற்றததை ஏற்படுத்த திட்டமிடுகின்றனர். இதனை கண்டிக்கிறோம் என்றனர்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு கோதவாடி குளத்திற்கு தண்ணீர் வந்தது கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் அ.தி.மு.க -தி.மு.க. வினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மக்களை வேதனையடையசெய்தது.