தர்மபுரிமாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு போன 66 செல்போன்கள் மீட்பு போலீஸ் சூப்பிரண்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார்
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட ரூ10 லட்சத்து 63 ஆயிரம் மதிப்புள்ள 66 செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஒப்படைத்தார்.;
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட ரூ.10 லட்சத்து 63 ஆயிரம் மதிப்புள்ள 66 செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஒப்படைத்தார்.
செல்போன்கள் திருட்டு
தர்மபுரி மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த செல்போன்களை மீட்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மேற்பார்வையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. செல்போன் திருட்டு புகார்களின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செல்போன் திருட்டுகளில் ஈடுபட்ட பல்வேறு நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் அவர்கள் திருடிய 33 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் உட்கோட்ட பகுதிவாரியாக தர்மபுரியில் 15 செல்போன்களும், அரூரில் 6 செல்போன்களும், பென்னாகரத்தில் 5 செல்போன்களும், பாலக்கோட்டில் 7 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 925 ஆகும்.
உரியவர்களிடம் ஒப்படைப்பு
இதுதொடர்பாக செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் மீட்கப்பட்ட 66 செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் கலந்துகொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, குணசேகரன், புஸ்பராஜா, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.