சாலையில் பள்ளம் தோண்டியதால் பொதுமக்கள் போராட்டம்
சாலையில் பள்ளம் தோண்டியதால் பொதுமக்கள் போராட்டம்
சேந்தமங்கலம், டிச.22-
வனப்பகுதி ஆக்கிரமிப்பை தடுக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையாக சாலையில் பள்ளம் தோண்டியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் கொல்லிமலை அடிவாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குட்டுக்காடு கிராமம் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளது. இங்குள்ள விவசாய நிலங்களுக்கு வனப்பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். இதற்கிடையே வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதைதொடர்ந்து வனப்பகுதிக்குள் யாரும் நுழையாத வகையில் பாதையின் குறுக்கே பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.
தகவல் அறிந்த குட்டுக்காடு கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் பள்ளம் தோண்டப்படுவதை தடுத்து அங்கேயே அமர்ந்தனர். இதனால் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
எழுதி கொடுத்தனர்
தகவல் அறிந்த நாமக்கல் வனச்சரகர் பெருமாள் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த சிலரை, நாமக்கல் மாவட்ட வன அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்த நேரில் அழைத்து செல்வதாக வனசரகர் பெருமாள் உறுதி அளித்தார். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து குட்டுக்காடு பகுதியில் இருந்து நடுக்கோம்பை செல்லும் வழியில் வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்ய மாட்டோம் என்று மாவட்ட வன அலுவலரிடம் எழுதி கொடுத்தனர்.