கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் கபசுரகுடிநீர் முக்கிய பங்கு வகிக்கிறது

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் கபசுரகுடிநீர் முக்கிய பங்கு வகிக்கிறது என சித்த மருத்துவ கண்காட்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.

Update: 2021-12-21 15:46 GMT
வெளிப்பாளையம்:
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் கபசுரகுடிநீர் முக்கிய பங்கு  வகிக்கிறது  என சித்த மருத்துவ கண்காட்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.
கண்காட்சி
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் 5-வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு வடக்கு பொய்கை நல்லூர் கோரக்க சித்தர் ஆசிரம வளாகத்தில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் சித்த மருத்துவ கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் குத்து விளக்கேற்றி  வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். 
இதில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன்,  நாகை மாலி எம்.எல்.ஏ., கோரக்க சித்தர் நிர்வாக அறங்காவலர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசும் போது கூறியதாவது:-
உணவே மருந்து
சித்த மருத்துவம் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் பாரம்பரியமான மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தில் நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்த பின் குணமாக்குவதற்கும் பல்வேறு மூலிகை மருந்துகளையும் வழங்கிய சித்தர்கள், நீண்ட நாள் வாழ்வதற்கான மருத்துவ முறைகளை வழங்கினார்கள். உணவே மருந்து, மருந்தே உணவு " என்ற இயற்கையோடு இணைந்த மருத்துவ முறையாக சித்த மருத்துவம் விளங்குகிறது.  
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் கபசுர குடிநீர் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு சிறுநீரக கல், பக்கவாதம், சர்க்கரை நோய், சோரியாசிஸ், வெண்புள்ளி உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மூலிகை தைலங்கள். மாத்திரைகள் மற்றும் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகம்  வழங்கப்பட்டன. 
மூலிகை செடிகள்
சித்த மருத்துவத்தால் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். 
 முகாமில் ஆடாதோடை, தூதுவளை, கற்பூரவள்ளி, அருகம்புல், கற்பூரவள்ளி, அருகம்புல், மஞ்சல் கரிசலாங்கண்ணி, துளசி, முடக்கறுத்தான் உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் மற்றும் சித்த மருத்துவ டாக்டர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி சித்த மருத்துவர் அலுவலர் ஜெமுனாராணி  நன்றி கூறினர்.

மேலும் செய்திகள்