திருவாரூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் பாதுகாப்பற்ற சூழலில் நெல் வீணாவதாக விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. பாதுகாப்பற்ற சூழலில் நெல் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.;

Update:2021-12-21 20:09 IST
திருவாரூர்:-

திருவாரூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. பாதுகாப்பற்ற சூழலில் நெல் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

நெல் கொள்முதல்

திருவாரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 800 எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் 265 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் அந்தந்த பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 
பொதுவினியோக திட்டத்தில் அரிசியாக வழங்க நெல் மூட்டைகள் அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட  ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

நெல் மூட்டைகள் தேக்கம்

கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு எடுத்து செல்லப்படவில்லை. இதனால் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. 

பாதுகாப்பற்ற சூழல்

பல கொள்முதல் நிலையங்கள் திறந்த வெளியில் உள்ளன. இங்கு நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.  தார்ப்பாய்களும் போதிய அளவு இல்லாததால் நெல் மூட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. 
மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் நெல் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சில இடங்களில் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்து வினாகி வருகிறது. எனவே கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொள்முதல் நிலையங்கள் மூடல்

இதுகுறித்து திருவாரூர் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கூறுகையில், ‘திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெல்லை முழுமையாக கொள்முதல் செய்யாமல், மழையை காரணம் காட்டி நெல் கொள்முதல் நிலையங்களை மூடிவிட்டனர். மாங்குடி, அலிவலம், தப்பளாம்புலியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து கடந்த ஒரு மாதமாக நெல் மூட்டைகள் எடுத்துச்செல்லப்படவில்லை. ஆயிரக்கணக்கான மூட்டைகள் இருப்பில் உள்ளது. 
இந்த நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று, விவசாயிகளிடம் இருந்து மேலும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்’ என்றனர். 

மேலும் செய்திகள்