நச்சுப்புகையால் மாணவிகள் அவதி

குப்பையில் இருந்து வரும் நச்சுப்புகையால் மாணவிகள் அவதி

Update: 2021-12-21 14:25 GMT
திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் பள்ளி அருகே குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுகிறது. இதனால் அதிலிருந்து வரும் நச்சுப்புகையால் பள்ளி மாணவ, மாணவிகள்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நச்சுப்புகை
திருப்பூர் பி.என். ரோடு நெசவாளர் காலனி பகுதியில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் பின் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதியில் சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் இங்கு தேக்கி வைக்கப்படுவதால் இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பள்ளியில் இருக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். மேலும், இந்த குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுவதால் அதிலிருந்து குபு,குபுவென புகை வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த குப்பையில் பிளாஸ்டிக் கழிவு, மருத்துவ கழிவு உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் இருப்பதால் தீ வைக்கப்படும் போது இதிலிருந்து நச்சுப்புகையும் வருகிறது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும், தொடர்ச்சியாக இந்த புகையை சுவாசிப்பதால் அவர்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. 
குவியும் குப்பை
இதேபோல், கொங்கு மெயின் ரோடு திருநீலகண்டபுரம் அருகே இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை அருகே உள்ள ரோட்டில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதேபோல், குப்பை ரோடு முழுவதும் பரவி கிடப்பதால் இந்த ரோடு வழியாக வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எஸ்.வி.காலனி, லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ரோடு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், சுற்றுவட்டார பகுதியில் பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால் பனியன் தொழில் சார்ந்தும் அதிக அளவிலான வாகனங்கள் செல்கின்றன. இதனால் இங்கு வாகனப்போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, இங்கு சேகரமாகும் குப்பை மற்றும் நெசவாளர் காலனி பள்ளி அருகே தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் எனவும், குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்