நீடாமங்கலம் பகுதியில் 43,500 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 43,500 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்று உள்ளது.

Update: 2021-12-21 13:39 GMT
நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 43,500 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்று உள்ளது. 

சம்பா-தாளடி சாகுபடி

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி பணிகள் தொடங்கின. 
குறுவை அறுவடை முடியும் தருவாயில் மழை குறுக்கிட்டது. அதைத்தொடர்ந்து சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தொடங்கி நடந்து வந்தபோது கனமழை பெய்து, விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. 

நீடாமங்கலம் வேளாண் கோட்டம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வேளாண் சார்ந்த பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.
நீடாமங்கலம் பகுதியில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 17 ஆயிரத்து 500 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 26 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் நடைபெற்று உள்ளது. மேலும் 1,800 ஏக்கரில் தென்னை சாகுபடியும், 100 ஏக்கரில் காய்கறி சாகுபடியும், 50 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட சிறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். 

நெல் ரகம்

சம்பா சாகுபடிக்கு சாவித்திரி என்கிற சி.ஆர்.1009, சொர்ணா சப்−1, கோ−50, ஆந்திரா கல்சர் உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தாளடி சாகுபடிக்கு டி.பி.எஸ்.5, எம்.டி.யு. 7,029, டி.பி. எஸ்.5, திருச்சி− 3, என்.எல்.ஆர். 34449, ஏ.டி.டி.−46, கோ.ஆர்.−50 உள்ளிட்ட ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
நீடாமங்கலம் அருகே உள்ள ராயபுரம், கானூர், சித்தமல்லி, பூவனூர், பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் தற்போது நெல் வயல்களில் களை எடுக்கும் பணி நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்