பிளாஸ்டிக் குப்பை அரியலூர் சிமெண்டு ஆலைக்கு அனுப்ப

பிளாஸ்டிக் குப்பை அரியலூர் சிமெண்டு ஆலைக்கு அனுப்ப

Update: 2021-12-21 13:30 GMT
காங்கேயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தினசரி 11 டன் குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகளை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சேகரித்து, பேட்டரி வாகனங்கள் மூலம் சென்னிமலை சாலையில் உள்ள குப்பைக் கிடங்குக்கு கொண்டு வருகின்றனர். வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத்தரம் பிரித்துக்கொடுத்தாலும், இந்த குப்பைகள் குப்பை கிடங்கிலும் தரம் பிரிக்கப்படுகிறது. இதில் தினமும் 2 டன் அளவில், மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் குப்பைகள் வாரந்தோறும்  10 டன் வரையில், அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு எரிபொருள் பயன்பாட்டுக்கு ஏற்றி அனுப்பப்படுகிறது.
இது குறித்து காங்கேயம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் எஸ்.செந்தில்குமார் கூறுகையில் காங்கேயம் நகராட்சி பகுதியில், மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பொருட்டு, அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு வாரந்தோறும் 7 முதல் 10 டன் வரையில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டணமும் பெற்றுக்கொள்ளாமல் ஏற்றி அனுப்புகிறோம் என்றார்.
காங்கேயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறுகையில் பிளாஸ்டிக் கழிவுகளை பொதுமக்கள் வீடுகள் தோறும் தரம் பிரித்துக்கொடுத்தால், காங்கேயம் நகராட்சி மிகவும் தூய்மையான பகுதியாக உருவாகும். எனவே பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்துக்கொடுத்து, நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்