பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

வெறையூர் அருகே பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.;

Update: 2021-12-21 11:52 GMT
திருவண்ணாமலை

வெறையூர் அருகே பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. 

கொற்றவை சிற்பம்

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பை சேர்ந்த ராஜ்பன்னீர்செல்வம், உதயராஜா மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து வெறையூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது வெறையூரை அடுத்த ஆங்குணம் கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறம் பலகை சிற்பம் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்தவர்கள் அளித்த தகவலின் பெயரில் ஆய்வு செய்தனர். 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

அந்த சிற்பம் சுமார் 5 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட சதுரமான பலகை கல்லின் மேற்புறம் அரைவட்ட வடிவில் செதுக்கப்பட்டு, அதனுள் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக கொற்றவை வடிக்கப்பட்டுள்ளது. 

எட்டு கரங்களில் தனது மேல் வலது கரத்தில் சங்கும் ஏனைய வலது கரங்கள் முறையே வாள், அம்பு ஏந்திய நிலையில் கீழ் வலக்கரம் இடையின் மீது ஊறு முத்திரையிலும், மேல் இடது கரத்தில் சக்கரமும் ஏனைய கைகள் முறையே வில், கேடயம் ஏந்திய நிலையில் கீழ் இடது கரம் தனது இடை ஆடையைச் சுருட்டி பிடித்தவாரு காட்டப்பட்டுள்ளது. 

கொற்றவையின் இருபுறமும் இருவீரர்கள் காட்டப்பட்டுள்ளனர். ஒரு வீரர் கைகூப்பி வணங்கிய நிலையிலும், மற்றொருவர் நவகண்டம் தரும் வகையிலும் வடிக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறது. 

பல்லவர் காலம்

இக்கொற்றவை சிற்பத்தின் ஆடை மற்றும் அணிகலன்களை வைத்து இது பல்லவர் காலத்தை சேர்ந்தது என்றும், இதன் காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. 

மேலும் இவ்வூரின் கிழக்கே உள்ள வயல்வெளியில் சிற்பம் ஒன்று இருப்பதாகவும் கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 சுமார் 3 அடி உயரம் உள்ள அச்சிற்பம் சதுர் புஜத்துடன் மேல் இருகரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும், கீழ் வலக்கரம் அபய முத்திரையில் கீழ் இடதுகரம் இடைமீது ஊறு முத்திரையிலும் உள்ள விஷ்ணு துர்க்கை எனக் கண்டறியப்பட்டது. 

இச்சிற்பத்தின் ஆடை அணிகலன்களை வைத்து இதன் காலம் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர்களின் சிற்பமாகக் கருதலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்