ஜி.எஸ்.டி. ஏய்ப்பு செய்த இரும்பு வணிகர்களின் 9 வங்கி கணக்குகள் முடக்கம்
ரூ.2.19 கோடி ஜி.எஸ்.டி. ஏய்ப்பு செய்த இரும்பு வணிகர்களின் 9 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டத்தின் கீழ் நுண்ணறிவுப் பிரிவு இணை கமிஷனர் மேற்பார்வையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சில போலி வணிகர்கள் மூலம் வடசென்னையில் இரும்பு வணிகம் செய்து வருபவர்கள் ரூ.2.19 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரிவரவை ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர்களது 9 வங்கி கணக்குகள் வணிகவரித் துறையால் கண்டறியப்பட்டது. அந்த கணக்குகள் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வணிக வரி கமிஷனர் மூலம் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், வணிகர்கள் யாராயினும் போலி வணிகர்களிடமிருந்து உள்ளீட்டு வரிவரவு பெற்றது தெரியவந்தால் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என வணிக வரித்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.