அடையாறில் கார் மோதி 2 பேர் காயம்
அடையாறு அருகே உள்ள மத்திய கைலாஷ் சந்திப்பு சிக்னலில் நேற்று முன்தினம் இரவு நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை அடையாறு அருகே உள்ள மத்திய கைலாஷ் சந்திப்பு சிக்னலில் நேற்று முன்தினம் இரவு நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்த வெற்றி (வயது 48) மற்றும் செல்லப்பாண்டியன் (45) இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்த மற்ற வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காரை வேகமாக ஓட்டி வந்த தியாகராஜன் என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர் செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் என்றும், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் என்றும் தெரியவந்தது. மேலும் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.