சிறுமி புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபர் போக்சோவில் கைது
சிறுமி புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர்:
திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழையூர் கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகன் நடராஜ்(வயது 19). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகவும், தற்போது அந்த சிறுமி வேறு ஒருவரை காதலிப்பதாகவும், இதனால் தன்னை விட்டு விலகும்படி அவரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நடராஜ், அவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியின் புகைப்படத்தை தவறான வார்த்தைகளுடன் சேர்த்து முகநூலில் பதிவிட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடராஜை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.