மதமாற்ற தடை சட்டத்திற்கு கர்நாடக மந்திரி சபை ஒப்புதல்; சட்டசபையில் மசோதா இன்று தாக்கல் ஆகிறது

கர்நாடக மந்திரிசபை கூட்டம், மதமாற்ற தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மசோதா இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.;

Update: 2021-12-20 21:58 GMT
பெங்களூரு:

கோரிக்கை விடுத்தனர்

கர்நாடகத்தில் சட்டசபையின் கடந்த மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நடைபெற்றது. அப்போது பா.ஜனதா உறுப்பினர் கூளிகட்டி சேகர், "ஏழை மக்களை ஆசை காட்டி மதமாற்றம் செய்கிறார்கள். எனது தாயாரே அவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலளித்த போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, "கட்டாய மதமாற்றத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கப்படும்" என்றார். 

அதன் பிறகு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு மடாதிபதிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதே நேரத்தில் இந்த மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரும் அரசின் முடிவுக்கு காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கிறிஸ்தவ அமைப்பினர் அரசின் முடிவை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மசோதாவுக்கு ஒப்புதல்

இதற்கிடையே கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ணசவுதாவில் கடந்த 13-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல் மதமாற்ற தடை சட்டத்தை சட்டசபையில் தாக்கல் செய்ய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது. 

அத்துடன் மதமாற்ற தடை சட்ட மசோதாவை சட்டசபையின் நடப்பு கூட்டத்தொடரில் 20-ந் தேதி (நேற்று) தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறினார். மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டி இல்லாத காரணத்தால், இந்த மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் கொண்டு வரலாமா? வேண்டாமா? என்று அரசு ஆலோசிப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபையின் கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முக்கியமாக, மதமாற்ற தடை சட்ட மசோாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் சில திருத்தங்களை அரசு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டசபையில் இன்று தாக்கல்

இந்த மதமாற்ற தடை சட்ட மசோதா இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா மதமாற்ற தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து தர்ணா நடத்தும் என்று கூறப்படுகிறது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஆளும் பா.ஜனதா அரசு மதமாற்ற தடை சட்ட மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கி இருப்பது, அரசு தனது முடிவில் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

மதமாற்ற தடை சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

* மதம் மாற விரும்புபவர்கள் 2 மாதங்களுக்கு முன்பே அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 

* மதம் மாறினால், அவர்களின் அடிப்படை சாதியின் மூலம் கிடைக்கும் இட ஒதுக்கீட்டின் பலன்கள் உள்பட அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் சேரும் மதத்தில் கிடைக்கும் சலுகைகளை பெற முடியும். 

* இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

* சிறுவர்கள், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை மதம் மாற்ற முயற்சி செய்தால் அத்தகையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

கூட்டு மதமாற்றத்துக்கு... 

* மேலும் தவறு செய்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அம்சமும் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

*அதே போல் கூட்டு மதமாற்றம் செய்தாலும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

மேற்கண்டவை அந்த மசோதாவில் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நிறைவேறுமா?

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும், இதே கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படுமா? என்பது சந்தேகம் என்று சொல்லப்படுகிறது. பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், மேல்-சபையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்