4 நாட்களுக்கு முன்பே செத்துவிட்டேன் - ரமேஷ்குமார் ஆவேசம்

கற்பழிப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பே தான் செத்துவிட்டேன் என்று ரமேஷ்குமார் ஆவேசமாக கூறினார்.

Update: 2021-12-20 21:49 GMT
பெங்களூரு:

ரமேஷ்குமாரின் சர்ச்சை கருத்து

  கர்நாடக சட்டசபையில் கடந்த 16-ந் தேதி வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாத்தில் தங்களுக்கு பேச அனுமதி வழங்க வேண்டும் என்று ஒரே நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எழுந்து நின்று கோரினர். அப்போது சபாநாயகர் காகேரி, ஒரே நேரத்தில் அனைவரும் எழுந்து நின்று பேசினால் நான் என்ன செய்வது என்று கேட்டார்.

  அப்போது குறுக்கிட்டு இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை குறிப்பிட்டு பேசிய முன்னாள் சபாநாயகரும், தற்போதைய காங்கிரஸ் உறுப்பினருமான ரமேஷ்குமார், "சமுதாயத்தில் ஒரு பேச்சு உள்ளது, அது கற்பழிப்பை தடுக்க முடியாவிட்டால், நாம் படுத்து கொண்டு அதை ரசிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது" என்றார்.

பகிரங்க மன்னிப்பு

  கற்பழிப்பு குறித்த அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்துக்கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற கூட்டத்திலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது.

  இதையடுத்து மறுநாள் ரமேஷ்குமார் சட்டசபையில், தனது பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதாக அறிவித்தார். ரமேஷ்குமாரின் இந்த கருத்து காங்கிரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது.

செத்துவிட்டேன்

  இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை நேற்று பெலகாவி சுவர்ண சவுதாவில் மீண்டும் கூடியது. இதில் கலந்து கொள்வதற்காக ரமேஷ்குமார் வந்தார்.

  அவரிடம் பெலகாவியில் விடுதலை போராட்ட வீரர் சங்கொள்ளி ராண்ணா சிலையை சேதப்படுத்திய சம்பவம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரமேஷ்குமார், "நான் கடந்த 4 நாட்களுக்கு முன்பே செத்துவிட்டேன். நீங்கள் கூறும் விவகாரம் குறித்து உயிருடன் இருப்பவர்களிடம் போய் கேளுங்கள்" என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். அவர் தனது முகத்தை இறுக்கத்துடன் வைத்திருந்தார்.

மேலும் செய்திகள்