கிணற்றில் மூழ்கி சிறுவன் சாவு

ஊத்துமலை அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2021-12-20 21:07 GMT
ஆலங்குளம்:
ஊத்துமலை அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சிறுவர்கள்
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வெண்ணிலிங்கபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிப்பாண்டியன். இவரது மகன்கள் சதீஷ்குமார் (வயது 11), செல்வகணேஷ் (10), ஆனந்தராஜ் (8). இவர்கள் 3 பேரும் ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் குளிப்பது வழக்கம்.
அதுபோல் நேற்று முன்தினம் கிணற்றில் 3 பேரும் குளிக்க சென்றனர். குளித்து கொண்டு இருக்கும்போது ஆனந்தராஜ் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தான். இதை கவனித்த சதீஷ்குமார், செல்வகணேஷ் ஆகியோர் அவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் யாருக்கும் நீச்சல் தெரியாததால் 3 பேரும் கிணற்றில் தத்தளித்து கூச்சலிட்டனர்.

கிணற்றில் மூழ்கி சாவு
அப்போது, அங்கு மாடு மேய்த்துக் கொண்டு இருந்த உறவினரான செல்லத்துரை என்பவர் கிணற்றில் சிறுவர்கள் தத்தளித்துக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் கிணற்றில் குளித்து காப்பாற்ற முயன்றார். சதீஷ்குமார், செல்வகணேஷ் ஆகியோரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். ஆனந்தராஜை காப்பாற்றுவதற்குள் அவன் தண்ணீரில் மூழ்கினான். 
இதுகுறித்து உடனடியாக ஆலங்குளம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக கீழப்பாவூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் செல்வம் என்பவர் பாவூர்சத்திரம் அருகே உள்ள கருமடையூர் பகுதியைச் சேர்ந்த முப்புடாதி (83) என்பவரிடம் சிறுவனை மீட்க உதவி கோரினார். இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் மூழ்கி இறந்த ஆனந்தராஜ் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தார்.

பரிதாபம்
பின்னர் ஊத்துமலை போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்துமலை அருகே அண்ணன்கள் கண் எதிரே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்