எடப்பாடி அருகே, சாலையில் தனியார் அமைத்த வேகத்தடையில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டிட தொழிலாளி பலி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

எடப்பாடி அருகே சாலையில் தனியார் அமைத்த வேகத்தடையில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டிட தொழிலாளி பலியானார். இதையடுத்து விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-12-20 21:04 GMT
எடப்பாடி, 
கட்டிட தொழிலாளி
எடப்பாடி அடுத்த வெள்ளக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து. இவருடைய மகன் பிரகாஷ் (வயது 34), கட்டிட தொழிலாளி. இவருக்கு ஸ்ரீதேவி (27) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த பகுதியில் நடேசன் என்பவர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல சாலையில் குழிதோண்டி குழாய் அமைத்துள்ளார். குழியை மூடுவதற்காக மணல், கற்கள் கொட்டி தற்காலிக வேகத்தடை அமைத்துள்ளார். 
நேற்று முன்தினம் இரவு இந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற பிரகாஷ், புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக வேகத்தடையில் மோதி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பிரகாஷ் இறந்துவிட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
சாலைமறியல்
இந்தநிலையில் நேற்று பிரகாசின் உடல் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரின் உறவினர்கள், உடலை வாங்க மறுத்தனர். மேலும் தற்காலிக வேகத்தடை அமைத்த நடேசன் என்பவரை கைது செய்யக்கோரியும், உயிரிழந்த பிரகாஷ் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் மற்றும் வேகத்தடையை அகற்றவும் அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், தாசில்தார் விமல் பிரகாசம், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தி.மு.க. நகர செயலாளர் பாஷா மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பிரகாசின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தற்காலிக வேகத்தடையை அகற்றவும், வேகத்தடை அமைத்த நடேசன் என்பவரை கைது செய்யவும், பிரகாஷ் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இந்த போராட்டம் காரணமாக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரி பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்