கூட்டுறவு வங்கி பயிர்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சேலத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கூட்டுறவு வங்கி பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி சேலத்தில் நேற்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-12-20 20:40 GMT
சேலம், 
காத்திருப்பு போராட்டம்
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து காத்திருப்பு போராட்டம் நடத்தின.
இதற்கு சேலம் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். 
இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நகைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
49 ஆயிரம் விவசாயிகள்
பின்னர் இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
கூட்டுறவு வங்கி பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தில் சுற்றறிக்கைக்கு விரோதமாக விதிமீறல் என்று தவறாக கூறி சேலம் மாவட்டத்தை சேர்ந்த 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்தப்படி பயிர்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்து சான்றிதழ் கிடைப்பதற்காக காத்திருப்பு போராட்டம் நடத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்