லாரி டிரைவருக்கு கத்திக்குத்து; வழிப்பறி செய்த 4 பேர் கைது
சமயநல்லூர் அருகே லாரி டிரைவரை கத்தியால் குத்தி வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாடிப்பட்டி,
சமயநல்லூர் அருகே லாரி டிரைவரை கத்தியால் குத்தி வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கத்திக்குத்து
தர்மபுரி மாவட்டம் மல்லாபுரத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் மகன் ஜம்பு (வயது 21) லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து கிரானைட் கல்லை ஏற்றிக்கொண்டு தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தார். சமயநல்லூர் அருகே வந்த போது வழி தெரியாமல் தேனூர் சாலையில் சென்றார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் லாரியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.1000 பறித்தனர். அதை தடுக்க முயன்ற போது ஜம்புவின் கையில் கத்தியால் குத்தினர்.
அதே போல் லாரியின் பின்னால் வந்த தூத்துக்குடி கோவில்பட்டி திருநகரை சேர்ந்த செண்பகராஜ் என்பவர் ஓட்டி வந்த வேனை வழிமறித்து அவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி பணம் இல்லாததால் அவர் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
4 பேர் கைது
அதேபோல் சமயநல்லூர் அருகே பாத்திமா நகரை சேர்ந்த அருள் ஆரோக்கியசாமி என்பவர் வீட்டின் அருகே இருந்த மோட்டார் அறை கதவின் பூட்டை உடைத்து நேற்று மதியம் 1.30 மணிக்கு 4 மர்ம நபர்கள் மோட்டாரை திருடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற ஆரோக்கியசாமி சத்தம் போட்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த இரு வேறு சம்பவங்கள் சம்பந்தமாக சமயநல் லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக தேனூரைச் சேர்ந்த ரஞ்சித் என்ற செபஸ்டியன் ராஜ் (32), கிருஷ்ணகாந்த் (22), அருண் (24), விஜயகுமார் (28) ஆகிய 4 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.