தஞ்சை பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனம்

தஞ்சை பெரிய கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2021-12-21 01:39 IST
தஞ்சாவூர்;
தஞ்சை பெரிய கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோவில்
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், வராகி அம்மன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
இங்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமான், தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். நடராஜருக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று ஆருத்ரா தரிசனம் நடந்து வருகிறது. அதைபோல் இந்தாண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஐம்பொன்னாலான நடராஜபெருமானுக்கு நேற்றுமுன்தினம் இரவு விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவிய பொடி, சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மலர் அலங்காரம்
தொடர்ந்து, கொரோனா விதிமுறையால், நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய, சிவகாமசுந்தரியுடன், நடராஜபெருமான் கோவிலில் உள் பிரகாரத்தில் வலம் வந்தனர். வழக்கமாக சிவகங்கை குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியானது, இந்த ஆண்டு கோவில் உள்பிரகாரத்தில் நடந்தது.
வழக்கமாக சுவாமி வீதி உலா 4 ராஜவீதிகளிலும் நடைபெறும். கொரோனா விதிமுறை காரணமாக இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப்போல கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது. பின்னர், மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று வேண்டி நெல்மணிகள் சாமி மீது தூவப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்