கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
ஆருத்ரா தரிசன விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.;
புதுக்கோட்டை
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனவிழாவையொட்டி நடராஜருக்கு சிறப்புஅபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள், சாந்தநாத சாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருப்புனவாசல் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விராலிமலை முருகன் கோவில்
இதேபோல, விராலிமலை முருகன் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதனையொட்டி கோவில் மலைமேல் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அறந்தாங்கி கோட்டை சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கோவிலை சுற்றி உள்ள 4 வீதிகளிலும் சாமி வீதிஉலா நடைபெற்றது.
ஆதனக்கோட்டை
பெருங்களூர் வம்சோத்தாரகர் உடனுறை மங்களாம்பிகா கோவிலில் நடராஜர்-சிவகாம சுந்தரி ஆகியோருக்கு பல்வேறு அபிஷேகங்களும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பெருங்களூர் குலதெய்வ டிரஸ்ட் மற்றும் ஆலய மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி, கோவில் குருக்கள் ஞானஸ்கந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
திருவரங்குளம்
திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோவிலான பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை முதல் நடராஜர்-சிவகாமசுந்தரிக்கு பால், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான அபிஷேக ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் 31 திருவெண்பாவை பாடி மகாதீபம் காண்பித்தனர். முன்னதாக சிவன் சன்னதியில் உள்ள அப்பர் சுந்தரர் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசருக்கு வழிபாடு செய்து தரிசனம் மேற்கொண்டனர் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பொன்னமராவதி-வடகாடு
பொன்னமராவதியில் உள்ள ஆவுடைய நாயகி சமேத சோழீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல் நகர சிவன் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.வடகாடு அருகேயுள்ள மாங்காட்டில் பழமை வாய்ந்த விடங்கேஷ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.