சோலைமலை முருகன் கோவிலுக்கு ரூ.70 லட்சத்தில் வைரம் பதித்த சேவல் கொடி காணிக்கை
சோலைமலை முருகன் கோவிலுக்கு முருக பக்தர் ஒருவர் ரூ.70 லட்சத்தில் வைரம் பதித்த சேவல் கொடி காணிக்கையாக வழங்கினார்.
அழகர்கோவில்,
மதுரை மாவட்டம் அழகர் மலையில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தை சேர்ந்த முருக பக்தர் சுப்பையா செட்டியார் - சரோஜா தம்பதியினர் ரூ.70 லட்சம் மதிப்புடைய புதிய வைர சேவல் கொடியை காணிக்கையாக செலுத்தினர்.
இதையடுத்து அங்குள்ள சஷ்டி மண்டபத்தில் யாகசாலையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பூமேடையில் வைர சேவல் கொடியை வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், மங்கள இசையுடன் பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து மேளதாளம் முழங்க அந்த புதிய வைர சேவல் கொடி ஆகமவிதிப்படி, மூலவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விழாவின் போது அமைச்சர்கள் மூர்த்தி, ரகுபதி, கோவில் துணை ஆணையர் அனிதா, மற்றும் கண்காணிப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.