வாலிபரை தாக்கிய போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது
வாலிபரை தாக்கிய போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
கீரமங்கலம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியை சேர்ந்த படித்த இளைஞர்களிடம் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் பெருமாள் (வயது 36) என்பவர் கடந்த சில மாதங்களில் சுமார் ரூ.20 லட்சம் வரை வாங்கிக் கொண்டு வேலை எதுவும் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. வேலைக்காக பெருமாளிடம் பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை அவரிடம் திருப்பி கேட்டுள்ளனர். ஆனால், அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், மேலும் சிலருக்கு வேலை வேண்டும், பணம் தயாராக உள்ளது என்று நைசாக பேசி பெருமாளை புதுக்கோட்டைக்கு வரவழைத்த சிலர் அவரை கீரமங்கலத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள ஒரு கொட்டகையில் அடைத்து தாக்குதல் நடத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது
இதுதொடர்பாக பெருமாள் கொடுத்த புகாரின்பேரில், அவரை தாக்கியதாக ஆயுதப்படை போலீஸ்காரர் மாதவன் (29) பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், பெருமாளை தாக்கிய சம்பவத்தில் போலீஸ்காரர் மாதவன், கீரமங்கலம் போஸ் மகன் வசந்த் (29), வேம்பங்குடி மேற்கு பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை மகன் தினேஷ் (29), சேந்தன்குடி ராஜ்குமார் (30) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் மாதவன், வசந்த் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த சென்னையை சேர்ந்த பெருமாளும் கைது செய்யப்பட்டார்.