பஸ்-கார் மோதல்; மதுரை அரசு டாக்டர் பலி
மதுரை அருகே பஸ்-கார் மோதிய விபத்தில் அரசு டாக்டர் பலியானார்.;
மதுரை,
மதுரை அருகே பஸ்-கார் மோதிய விபத்தில் அரசு டாக்டர் பலியானார்.
அரசு டாக்டர்
நெல்லை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்தவர் ரகுபதிராகவன். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 36). இவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பிரீத்தா. இவரும் டாக்டர் ஆவார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
டாக்டர் கார்த்திகேயன் வார விடுமுறை நாட்களில் ஊருக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கார்த்திகேயன் ஊருக்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து நேற்று காலை மீண்டும் பணிக்கு வருவதற்காக தனது காரில் மதுரைக்கு புறப்பட்டார்.
பஸ் மீது மோதியது
மதுரை விமான நிலையம் அருகே உள்ள பரம்புப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது கார்த்திகேயன் ஓட்டி வந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. தறிகட்டு ஓடிய அந்த கார், அந்த வழியாக வந்த அரசு பஸ்சின் மீது உரசியதுடன், நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரையும் தாண்டி சென்றது.
அப்போது, எதிர் திசையில் காரைக்குடியில் இருந்து சிவகாசி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது கார்த்திகேயன் கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. பஸ்சின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது.
உயிரிழப்பு
இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய கார்த்திகேயனை மீட்க முயன்றனர். அதற்குள், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த பெருங்குடி போலீசார் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காரில் சிக்கியிருந்த கார்த்திகேயனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பணிக்கு வந்த ேபாது அரசு டாக்டர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியது.