பட்டாசு தொழிலை நிச்சயம் தமிழக அரசு காக்கும்
பட்டாசு தொழிலை நிச்சயம் தமிழக அரசு காக்கும் என்று சிவகாசியில் நடை பெற்ற அரசு விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் உறுதி அளித்தனர்.;
சிவகாசி,
பட்டாசு தொழிலை நிச்சயம் தமிழக அரசு காக்கும் என்று சிவகாசியில் நடை பெற்ற அரசு விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் உறுதி அளித்தனர்.
நலத்திட்ட உதவிகள்
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 1,482 பேருக்கு ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று சிவகாசி கம்மவார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, எப்போது எல்லாம் ஆபத்து வருகிறதோ, அப்போது எல்லாம் மு.க.ஸ்டாலின் உதவிகரம் நீட்டுவார். இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் பட்டாசு தொழில் காக்க இந்த அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது, நானும், தங்கம் தென்னரசுவும் இந்த மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவோம். இந்த மாவட்டத்தில் முக்கிய தொழிலான பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி உள்ளோம். நிச்சயம் இந்த தொழில் அழிவில் இருந்து காக்கப்படும் என்றார்.
குழந்தைக்கு பெயர்
நிகழ்ச்சியில் 1,482 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது மேடைக்கு பேராப்பட்டியை சேர்ந்த அசோக்குமார் தனது பெண் குழந்தையுடன் வந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் பெயர் வைக்க வலியுறுத்தினார். தமிழரசி என்ற பெயரை அமைச்சர் வைத்தார். நிகழ்ச்சியில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் மாவட்ட ஊராட்சி முகமை திலகவதி, தனி தாசில்தார் ஆனந்தராஜ், யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணைத் தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் உசிலை செல்வம் (பள்ளப்பட்டி), நாகராஜன் (விஸ்வநத்தம்), லீலாவதி சுப்புராஜ் (சித்துராஜபுரம்), தி.மு.க. பிரமுகர்கள் வனராஜா, தங்கராஜ், உதயசூரியன், காளிராஜன், சபையர் ஞானசேகரன், காங்கிரஸ் பிரமுகர்கள் சேர்மத்துரை, பைபாஸ் வைரக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் ராஜ்குமார் நன்றி கூறினார்.