ராச்சாண்டார் திருமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ராச்சாண்டார் திருமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2021-12-20 18:22 GMT
கரூர்
கரூர்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூரில் நேற்று கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 409 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் வழங்கிய 20 நிமிடத்தில் 18 பேருக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் இலவச அயன்பாக்ஸ் பெட்டிகளை கலெக்டர் வழங்கினார். 
வீட்டு குடிநீர் இணைப்பு
கூட்டத்தில் வெண்ணைமலை பசுபதிபாளையம், ராம்நகர் ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் இந்த பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடிநீர் வசதியானது இதுவரை சரியாக கிடைக்கவில்லை. கடந்த 8 மாதத்திற்கு முன்பு வீட்டு குடிநீர் இணைப்பிற்கு காதப்பாறை பஞ்சாயத்து அலுவலகத்தில் வீட்டு குடிநீர் இணைப்பிற்கு டெபாசிட் மற்றும் குடிநீருக்கான வரி ஆகியவற்றை செலுத்தியுள்ளோம். ஆனால் இதுவரை வீட்டு குடிநீர் இணைப்பானது வரவில்லை. இதுதொடர்பாக காதப்பாறை பஞ்சாயத்தில் வீட்டு குடிநீர் இணைப்பு வரவில்லை என மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. ராம்நகர் வெண்ணைமலை பசுபதிபாளையம் ஊர்பொதுமக்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி
கரூர் மாவட்டம், ராச்சாண்டார் திருமலை ஊராட்சி ஊர் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டம், ராச்சாண்டார் திருமலை கிராமம், ஊர்பொதுமக்கள் சார்பாக சுமார் 58 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. 
59-ம் ஆண்டாக இந்த ஆண்டும் வருகிற ஜனவரி மாதம் 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் (மாட்டு வேடிக்கை) ஜல்லிக்கட்டு நடத்துவதாக ஊர்பொதுமக்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. எனவே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியும், அதற்கான யோசனைகளையும் வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்