அரக்கோணம் கோட்டத்தில் சாலை விபத்து நிவாரண நிதியாக 163 பேருக்கு ரூ.1 கோடியே 34 லட்சம் கலெக்டர் வழங்கினார்
அரக்கோணம் கோட்டத்தில் சாலை விபத்து நிவாரண நிதியாக 163 பேருக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்தை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
ராணிப்பேட்டை
அரக்கோணம் கோட்டத்தில் சாலை விபத்து நிவாரண நிதியாக 163 பேருக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்தை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப் பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு மற்றும் குடியிருப்பு மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனுக்கள் மற்றும் பொது நலன் குறித்த மனுக்கள் என 393 மனுக்கள் பெறப்பட்டன.
நல வாரிய அட்டை
பின்னர் அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிப்புக்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மூலம் 12 இருளர் இன மக்களுக்கு பழங்குடியினர் நல வாரியம் அட்டைகளையும், அரக்கோணம் கோட்டத்துக்கு உட்பட்ட 163 பேருக்கு ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான சாலை விபத்து நிவாரண நிதியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், ஆதி திராவிடர் நல அலுவலர் இளவரசி, வருவாய் கோட்டாட்சியர் சிவதாசு, தாசில்தார் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.