திருவாரூரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஊர்வலம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருவாரூரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஊர்வலம் நடந்தது.
திருவாரூர்:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருவாரூரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஊர்வலம் நடந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகை
வருகிற 25-ந்தேதி(சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகையை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்க விடப்பட்டு இருந்தது. இதுமட்டுமின்றி குடில்கள் அமைத்து கிறிஸ்துமஸ் மரம் வைத்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கிறிஸ்துமஸ் கேக்குகள் பேக்கரி கடைகளில் விதவிதமாக தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். தேவாலயங்களில் கடந்த ஒருவாரமாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்
விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட போதகர்கள் ஐக்கியம் மற்றும் பெந்தேகோஸ்தே மாமன்ற திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஊர்வலம் நடத்தினர்.
ஊர்வலத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் நந்தானியேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மைக்கேல்தாஸ், மாவட்ட பொருளாளர் போவாஸ் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தை தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் தஞ்சை வில்லியம்ஸ் பாடல்களை பாடினார். இதில் என்ஜினீயர் ரோலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.