டெல்லி போலீசாரை பிடித்துச் சென்ற கீழக்கரை போலீசார்
டெல்லி போலீசாரை கீழக்கரை போலீசார் பிடித்து சென்றனர்.
கீழக்கரை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஏமன் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விமானநிலையத்தில் பரிசோதனை செய்ததில் போலி விசாவில் வந்தது தெரியவந்தது. உடனே ஏமன் நாட்டில் மணிகண்டனை 5 நாள் காவலில் வைத்தனர். பின்னர் டெல்லி விமானநிலையத்துக்கு மணிகண்டனை அனுப்பி வைத்து டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அறந்தாங்கியை சேர்ந்த ரசாக் என்பவரிடம் ரூ. 90 ஆயிரம் கொடுத்து போலி விசா வாங்கியதாக கூறியுள்ளார்.உடனே டெல்லி போலீசார் அறந்தாங்கி சென்று ரசாக்கை கைது செய்தனர். அப்போது அவர் கீழக்கரையை சேர்ந்த பக்ருதீன் (வயது 36) என்பவர் தனக்கு போலி விசா ஏற்பாடு செய்து தந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து டெல்லி போலீசார் 3 பேர் பக்ருதீனை தேடி கீழக்கரைக்கு சென்றனர். அங்கு ஒரு ஓட்டலுக்கு சென்று விசாரித்தனர். அப்போது 3 போலீசாரும் சாதாரண உடை அணிந்து இருந்ததால் போலீசார் என்பதை அறியாமல், ஒருவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் தாக்கியதாகவும்,. இதனால் அந்த நபர் கூச்சலிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த கீழக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் பிடித்து கீழக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அங்கு அவர்கள் அடையாள அட்டையை காண்பித்த பின்னரே அவர்கள் போலீசார் என்பது தெரியவந்தது.. பின்னர் டெல்லி போலீசார், பக்ருதீன் வீட்டிற்கு சென்று வாசலில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர். இதுகுறித்து கீழக்கரை போலீசார் கூறும்போது, “வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய போலீசார் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் இதுபோன்ற குழப்பம் ஏற்படுகிறது” என்று கூறினர்.