சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்
சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்
கோவை
மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
மூலப்பொருட்கள் விலை உயர்வு
நாடு முழுவதும் ஸ்டீல் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த மூலப்பொருட்களான காப்பர், அலுமினியம், பேப்பர், பிளாஸ்டிக், சி.ஆர்.சீட், ஸ்கிராப் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இதனால் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஏற்கனவே பெற்ற ஜாப் ஆர்டர்களை செய்ய முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.
மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக, பல்வேறு அத்தியாவசிய பொருட்களும் விலை அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்தக்கோரிநாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பினர் கட்டங்களாக கோரிக்கைகள் விடுத்தனர்.
ஆனால், இதுவரை விலையேற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
இதனால் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 10 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இணைந்து நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடைபெற்றன.
50 ஆயிரம் நிறுவனங்கள்
கோவை மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 70 தொழில் அமைப்புகள் உள்ளடங்கிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
கோவையில், சுந்தராபுரம், ஆவாரம்பாளையம், பீளமேடு, கணபதி, சின்னவேடம்பட்டி, இடையர்பாளையம், நீலாம்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இந்த போராட்டம் காரணமாக தொழில் நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டதால் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதிகள் வெறிச்சோடி இருந்தது. இதனால், மாவட்டத்தில் சுமார் ரூ.1500 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
கலெக்டரிடம் மனு
இந்த நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், கோவை கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, தென்னிந்திய பொறியியில் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் (சீமா) கார்த்திக், இந்தியத் தொழில் வர்த்தக சபை (கோவை கிளை) தலைவர் பாலசுப்ரமணியம், வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சவுந்திரகுமார், டேக்ட் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ், காட்மா சங்க தலைவர் சிவக்குமார், ரெயில்வே பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுருளிவேல், உள்பட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் சமீரனிடம் தொழில் அமைப்புகள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழில் அமைப்பினர் கூறியதாவது:-
70 சதவீதம் விலை உயர்வு
தொழில் துறைக்கு அவசியமான அலுமினியம், காப்பர் உள்பட பல்வேறு மூலப்பொருட்களின் விலை, இதற்கு முன்பு மாதத்திற்கு ஒரு முறை 2 சதவீதம் கூடி, குறைந்து வந்த நிலையில் தற்போது தினமும் விலை உயர்வு ஏற்பட்டு வருகிறது.
மொத்தமாக கடந்த ஒரு வருடத்திற்குள், மூலப்பொருட்கள் விலை 70 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனால் பம்பு செட்டுகள், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் 40 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. இதனால் பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத் துறைகள் ஆகியவற்றில் ஒப்பந்தம் எடுத்து பணி ஆணை பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், பெருமளவு நஷ்டத்தைசந்திக்கின்றன.
உற்பத்திப் பொருட்களுக்கான உற்பத்தி செலவும் உயர்கிறது. ஆனால் சந்தையில் அதற்கான விலை கிடைப்பதில்லை. மேலும் கடந்த சில மாதங்களாக வங்கிகளில் கடன் பெறுவதிலும், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.
மூலப்பொருட்கள் விலை உயர்வு தொடருமானால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதற்கிடையே பெரிய நிறுவனங்கள் மட்டும் ஜாப்-ஆர்டர்கள் எடுத்து கொண்டு விடுகின்றன. இதனால் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு உள்ளது.
கண்காணிப்பு குழு
எனவே, பிரதமர் மற்றும் தொடர்புடையமத்திய அரசு அமைச்சகங்கள் உடனடியாக தலையிட்டு மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும்.
மூலப்பொருட்களுக்கான விலை ஏற்றத்தை கண்காணிக்க, கண்காணிப்பு குழு ஏற்படுத்த வேண்டும்.
மூலப்பொருட்கள் விலையை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இருந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஸ்டீல் வழங்கப்படுவது முறைப்படுத்தப்பட்டு, எளிமையாக்கப்பட வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களின் ஆர்டர்களை முடிக்க முடியாமல் ரத்து செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது.
பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுடைய ஸ்டீல் உற்பத்தியில் 40 சதவீதத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.