பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல்; பள்ளி மாணவன் பலி
நிலக்கோட்ைட அருகே பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலியானான். இதையடுத்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலியானான். இதையடுத்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஆட்டோவில் பயணம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சீத்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மகன் விஷ்வா (வயது 11). இவன், சிலுக்குவார்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
அதேபகுதியை சேர்ந்த மாணவிகள் ஆனந்தி (16), கலையரசி (16), பாண்டீஸ்வரி (13). இவர்கள் 4 பேரும் பள்ளிக்கூடம் முடிந்து நேற்று மாலை 5 மணி அளவில் ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
மதுரை-வத்தலக்குண்டு மெயின்ரோட்டில் மணியகாரன்பட்டி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து மதுரை நோக்கி 2 அரசு பஸ்கள் சென்றன. இதில் ஒரு பஸ், இன்னொரு பஸ்சை முந்தி செல்ல முயன்றது.
மாணவன் சாவு
அப்போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ஆட்டோ மீது பஸ் நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த மாணவன் விஷ்வா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
மேலும் ஆட்டோவிலிருந்த மாணவிகள் கலையரசி, ஆனந்தி, பாண்டீஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஆட்டோ டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து சென்று காயமடைந்த மாணவிகளை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஆனந்திக்கும், கலையரசிக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
சாலைமறியல்
இதுபற்றி தகவல் அறிந்ததும் சீத்தாபுரம், தம்பிநாயக்கன்பட்டி, தோப்புப்பட்டி மிளகாய் பட்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிராம மக்கள் ஏராளமானோர் விபத்து நடந்த இடத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் திடீரென இறந்த விஷ்வாவின் உடலை, நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து தூக்கிக்கொண்டு நிலக்கோட்டை-செம்பட்டி சாலையில் அரசு பஸ் டிரைவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊர்வலமாக செல்ல ஆரம்பித்தனர்.
இதையடுத்து போலீசார் பொதுமக்களை தடுக்க முயன்றனர். எனினும் அதை பொதுமக்கள் கேட்காமல் ஆவேசத்தில் விஷ்வாவின் உடலை நிலக்கோட்டை-செம்பட்டி சாலையில் வைத்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு
இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் மாணவன் விஷ்வாவின் உடலை பொதுமக்கள் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் அரசு மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் விரைந்து வந்தார். அவர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம், விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.
பின்னர் விஷ்வாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம், நிலக்கோட்டை பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.