பஸ் மோதி மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இடிந்து தரைமட்டம்; பெண் பலி-20 பேர் காயம்

வேடசந்தூர் அருகே பஸ் மோதி, சாலையோரம் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் ஒரு பெண் பலியானார். 20 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-12-20 16:39 GMT
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே பஸ் மோதி, சாலையோரம் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் ஒரு பெண் பலியானார். 20 பேர் காயம் அடைந்தனர். 
பஸ் மீது லாரி மோதல்
கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை, கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 33) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
வேடசந்தூர் அருகே அழகாபுரி-வேடசந்தூர் சாலையில் கூவக்காப்பட்டி ஆதிதிராவிடர் காலனி அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. சாலை வளைவில் திரும்பியபோது, வேடசந்தூரில் இருந்து அழகாபுரி நோக்கி மணல் ஏற்றி கொண்டு எதிரே வந்த டிப்பர் லாரி பஸ்சின் பின்பகுதியில் வேகமாக மோதியது.
இதனால் பஸ் டிரைவர் அதிர்ச்சியடைந்து சாலையோரம் திருப்பினார். அப்போது அங்கு விவசாய கூலிவேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்த கூவக்காபட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த வீரம்மாள் (60), லட்சுமி (55) ஆகியோர் மீது பஸ் மோதியது. இதில், லட்சுமி பரிதாபமாக இறந்தார்.
 மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி
பெண்கள் மீது மோதிய பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது பயங்கரமாக பஸ் மோதியது. 
இந்த விபத்தில் சுமார் 20 அடி உயரம் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இடிந்து விழுந்து தரைமட்டமானது. மேலும் அதில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியது. இந்த காட்சியை கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 
20 பேர் படுகாயம் 
இந்த விபத்தில் பஸ் டிரைவர் தினேஷ்குமார், வீரம்மாள் மற்றும் பயணிகள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு வேடசந்தூர், திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் மற்றும் கூம்பூர் போலீசார் விரைந்து சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சுபாசை (25) பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தை வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் பார்வையிட்டார். பின்னர் அவர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்